ஆரை
வளரியல்பு: குறுஞ்செடி
தாவர விளக்கம்: செங்குத்தாக வளர்ந்திருக்கும் மெல்லிய தண்டில், நான்கு கால் வட்ட இலைகள் கொண்ட அமைப்பில் வளர்ந்திருக்கும் சிறிய நீர் வாழ் தாவரமாகும். தமிழகமெங்கும், நீர் நிலைகளிலும், வாய்க்கால்களிலும் இயல்பாக வளர்கின்றது. ஆடி முதல் மார்கழி மாதம் வரை வாய்க்கால்களில் அதிகமான அளவில் வளர்ந்திருப்பதைக் காண முடியும். கீரையாக அங்காடிகளில் விற்கப்படுகின்றது. ஆலக்கீரை, நீராரை போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. இலைகளே மருத்துவப்பயன் கொண்டவை.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்
ஆரை, சத்து மிகுந்த கீரையாகும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். தாகம் தணிக்கும். இது இனிப்புச் சுவையுடையது. பசியைத் தூண்டும்; ஆண்மையுணர்வைப் பெருக்கும்; விந்து உற்பத்தியை அதிகரிக்கும்; வெள்ளைப்படுதலையும் கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோய் கட்டுப்பட
Ø
தினமும் சிறிதளவு ஆரைக்கீரை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர வேண்டும்.
தாய்ப்பால் சுரப்பை நிறுத்த
Ø
கீரையைச் சமைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும்.
சிறுநீர்க்கட்டு, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாக
Ø
இலையை மைய அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து, தேவையான அளவு எருமை மோரில் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்யலாம்.
சிறுநீருடன் இரத்தம் வருதல் கட்டுப்பட
Ø
இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, 30 கிராம் தூளை ½ லிட்டர் நீரில் போட்டு, பாதியாகக் காய்ச்சி, பாலும், கற்கண்டும் கலந்து குடித்துவர வேண்டும். காலை, மாலை வேளைகளில் இவ்வாறு செய்யலாம்.