அரிவாள்மனைப் பூண்டு
வளரியல்பு: சிறுசெடி
தாவர விளக்கம்: சிறிய, அதிகக் கிளைகளுடன் கூடிய, ரம்பம் போன்ற பற்களுள்ள நீண்ட இலைகளைக் கொண்ட தாவரம். பூக்கள் மஞ்சள் நிறமானவை. இலைக்கு ஒன்றாக இலைக்காம்புகளுக்கு இடையில் பூக்கும். தென்னிந்தியா முழுவதும் பரவலாக களைச் செடியாக காணப்படுகின்றது. கிணற்று ஓரங்கள், நீர்பிடிப்புள்ள பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் மிகவும் தழைத்துக் காணப்படும். மழைக் காலத்தில் எங்கும் சாதாரணமாக காணப்படுபவை. குறுந்தோட்டி, சிரமுட்டி ஆகிய பெயர்களும் அரவாள்மனைப் பூண்டிற்கு உண்டு. இலைகளே அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை. குறைந்த அளவில், வேர், பட்டை, விதைகள் ஆகியவையும் பயன்படுகின்றன.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்
முழுத்தாவரமும், துவர்ப்பும், கசப்பும் கொண்டது, வெப்பத் தன்மை மிகுந்தது. இலைகள், வெட்டுக்காயங்களில் ஏற்படும் இரத்தப் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தும் திறன் மிகுந்தவை. “வெட்டுக்காயத்தை விரைவிலுலர்த்திவிடும்...” என்கிறது அகத்தியர் குணபாடம்.
வெட்டுக்காயத்தினால் ஏற்படும் இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்த
Ø
பசுமையான இலைகளை நன்கு இடித்துச் சாற்றை காயத்தின் மேல் பிழிய வேண்டும். காயம் குணமாக இடித்த இலைகளை காயத்தின் மேல் வைத்துக் கட்ட வேண்டும் அல்லது இலையை மைய அரைத்து நன்கு பூச வேண்டும்.
புண்கள், காயங்கள் ஆற
Ø
அரிவாள்மனைப் பூண்டின் இலைகளைச் சேகரித்துக் கொண்டு, நன்கு காய வைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். அத்துடன், சம அளவு தேன் மெழுகு, சிறிதளவு தேங்காயெண்ணெய் சேர்த்துக் களிம்பு செய்து வைத்துக் கொண்டு காயங்களின் மீது பூச வேண்டும்.
ஈறுகளிலிருந்து இரத்தம் வருவதைக் கட்டுப்படுத்த
Ø
20 பூக்களைப் பறித்து 2 டம்ளர் நீரில் இட்டு, 1 டம்ளராக சுண்டக் காய்ச்சி, இளஞ்சூடாக வாய் கொப்பளித்து வர வேண்டும்.
வெள்ளைபடுதல் குணமாக
Ø
வேர்ப்பட்டைகளை உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி பால் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.
மூட்டுவலி குணமாக
Ø
இலைகளை நன்கு அரைத்து வலியுள்ள இடத்தில் பூச வேண்டும். தொடர்ந்து 3 வாரங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.
Ø புண்கள் சீழ்பிடிக்காமல் ஆற்றும் தன்மையும், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் மற்றும் இரத்தத்தை உறையவைக்கும் பண்பும் இலைகளுக்கு உள்ளது என்கிற தகவல் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.