அரத்தை
வளரியல்பு: செடிகள்
தாவர விளக்கம்: 2 மீ. வரை உயரமாக வளரக் கூடியவை. இலைகள் நீளமானவை, அகலத்தில் குறுகியவை மேல்பக்கம் அடர்த்தியான பச்சையாகவும், கீழ்பக்கம் சாம்பல் பச்சையாகவும், ஓரங்கள் வெண்மையாகவும் காணப்படும். இலையின் நடுநரம்பு வலிமையானது. மலர்கள் 3 செ.மீ. வரை நீளமானவை. பச்சை கலந்த வெண்மை நிறமானவை, தொகுப்பானவை. பழங்கள் சிறியவை, ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமானவை. பூ இதழ் வெண்மையாக, சிவந்த கீற்றுகளுடன் காணப்படும். வேர் கிழங்குகள் மணமுள்ளவை. இயற்கையாக இந்தத் தாவரம் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலையின் கிழக்குச் சரிவுகளில் விளைகின்றது. இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகின்றது. பேரரத்தை, காலங்கல் மற்றும் தும்ரஷ்டகம் என்கிற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. வேர்க்கிழங்குகள் காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்
பல நூற்றாண்டுகளாக அரத்தை இந்திய மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்று வந்துள்ளது. குடும்ப வைத்திய முறையிலும் அரத்தை மிக உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. வேர்க்கிழங்குகளே அதிகமாக மருத்துவத்தில் பயன்படுபவை. இவை, காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. முடக்குவாதம், சிறுவர்களுக்கான சுவாச நோய்கள், வாத நோய்கள், குடல் வாயு, தொண்டை நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகமாகின்றது. மேலும், வயிற்று நோய்களுக்கு மருந்தாகவும், கிருமிநாசினியாகவும், குடல் புழுக்களை வெளியேற்றுவதற்கும் பயன்படுகின்றது.
குறிப்பு: இந்தப் பகுதியில் அரத்தை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தும் அதன் காய்ந்த வேர் கிழங்குகளையே குறிக்கும்.
தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாக
Ø
அரத்தையை வெயிலில் நன்கு காய வைத்து, தூள் செய்துக் கொள்ள வேண்டும். ¼ தேக்கரண்டி தூளை, 1 தேக்கரண்டி அளவு தேனுடன் கலந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர வேண்டும் அல்லது ஒரு சிறு துண்டு அரத்தையை வாயிலிட்டு நன்கு மென்று சுவைக்க காரமும் விறுவிறுப்பும் உண்டாகி உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்க வேண்டும்.
அடிப்பட்ட வீக்கம், வலி குறைய
Ø
அரத்தையை வெந்நீர் விட்டு அரைத்து பசைப் போல செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.
பல் வலி, ஈறுவீக்கம் குணமாக
Ø
அரத்தைத் தூளை சம அளவு பற்பொடியுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் பல்துலக்கி வர வேண்டும்.
Ø
சித்தரத்தை – Alpinia officinarum
என்கிற வகையும் அரத்தையில் உண்டு. சிற்றரத்தை என்றும் கூறப்படும். இதன் வேர்க்கிழங்கும் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும். இது சீனாவில் பெருமளவு வளர்க்கப்படுகின்றது. இதற்கு அரத்தையைவிட அதிக மணமும் காரச்சுவையும் உண்டு. இதனுடைய மருத்துவப் பயன்களுக்காக வங்காள தேசத்திலும், வட இந்தியாவிலும் பெருமளவு வாணிப ரீதியாக பயிர் செய்யப்படுகின்றது.
Ø
காய்ந்த வேர்கிழங்குகள், மார்புச்சளி, இருமல், பல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மையையும், பசி அதிகரிக்கும் பண்பினையும் கொண்டவை.