ஆடாதோடை
வளரியல்பு: புதர்ச்செடி
தாவர விளக்கம்: உயரமான, அதிகக் கிளைகளைக் கொண்ட, அடர்த்தியான தாவரம். வெயிலிலும் பசுமை மாறாத கரும்பச்சை நிறமான ஈட்டி போன்ற இலைகள், புதர் போன்ற செடி அமைப்பு, நுனியில் வெள்ளையாக உள்ள கொத்தான பூக்களைக் கொண்டு ஆடாதோடையை எளிதில் இனம் காணலாம். நுனியில் கொத்தான இலைகளைப் போன்ற அமைப்புடைய பூவடிச் செதில்களில் பூக்கள் பூக்கும். பழங்கள், 4 விதைகளுடன் காணப்படும். விதைகள் உலர்ந்து வெடிக்கும் வகையைச் சார்ந்தவை. தமிழகமெங்கும் ஆடாதோடை விளைகின்றது. கிளைகளை வெட்டி நட்டாலே முளைத்துக் கொள்ளும் தன்மையை ஆடாதோடை கொண்டுள்ளது. கிராமங்களில் வேலிகளிலும், தரிசு நிலங்களிலும் ஆடாதோடை ஏராளமாகக் காணப்படுகின்றது. கபக்கொல்லி, சளிக்கொல்லி போன்ற வழக்குப் பெயர்களும் ஆடாதோடைக்கு உண்டு. இலை, பூ, வேர் ஆகியவை சிறப்பான மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளிலிருந்து மஞ்சள் நிறமான சாயம் தயாரிக்கப்படுகின்றது. இலைகளிலுள்ள சில வகை காரச் சத்துக்களால் இவை பூச்சியாலோ, காளான்களாலோ பாதிக்கப்படுவதில்லை. இந்தப் பண்பின் காரணமாக பழங்களைச் சேகரித்துப் பாதுகாக்க இலைகள் பயன்படுகின்றன. தரிசு நிலங்கள் மேம்பட ஆடாதோடைச் செடிகளை நட்டு வளர்க்கலாம்.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்
”ஆடு தொடாத இலை” என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடையானது. இலையில் இருக்கும் ஒருவிதக் கசப்புச் சுவை காரணமாக கால்நடைகள் கூட ஆடாதோடை இலைகளைச் சாப்பிடுவதில்லை. “ஆடாதோடைக்குப் பாடாத தொண்டையும் பாடும்” என்கிற பழமொழி உண்டு. இலைகளில் ஒரு முக்கியமான எண்ணெயும், “வாசிசீன்” என்கிற ஆல்கலாய்டும் உள்ளன. இதன் முக்கியமான மருத்துவப் பண்பு சளியை வெளிக்கொண்டு வருவதாகும். ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்து சாப்பிட்டு வர தொண்டையை எப்போதும் வலுவாக வைத்திருக்கும். சளியைப் போக்கும் தன்மையுடன் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் தன்மையும் ஆடாதோடைக்கு உண்டு.
இருமல், சளி, தொண்டைக்கட்டு தீர
Ø
பசுமையான ஆடாதோடை இலைகளைச் சேகரித்துக் கொண்டு, நடுநரம்பை நீக்கி, ஒன்றிரண்டாகக் கத்தரித்துக் கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு, 4 டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்யலாம்.
சளி இல்லாமல் புகைச்சலாக ஏற்படும் வறட்டு இருமல் குணமாக
Ø
3 கொழுந்து இலைகளைப் பறித்து, மைய நசுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ½ டம்ளர் அளவாகக் காய்ச்சி காலையில் குடிக்க வேண்டும். இது போல 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
காய்ச்சல் குணமாக
Ø
ஒரு டம்ளர் தண்ணீருக்கு 4 ஆடாதோடை இலைகள் வீதம் எடுத்து நசுக்கிக் கொள்ள வேண்டும். இவற்றைத் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த ஆடாதோடை இரசத்தை, காலை, மாலை ½ டம்ளர் வீதம் சரியாகும் வரை சாப்பிட வேண்டும். இந்த இரசம் சாப்பிடும் காலத்தில் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும். செரிக்க கடினமான உணவு, குளிர்ந்த உணவு, புளிப்பான உணவு சாப்பிடுதல் கூடாது. பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா, மூச்சுத் திணறல் கட்டுப்பட ஆடாதோடைச் சுருட்டு:
Ø
ஆடாதோடை இலைகளைக் காய வைத்து, தூள் செய்து வைத்துக் கொண்டு, இதனை, காய்ந்த ஊமத்தை இலையில் சுருட்டி புகைபிடித்து வர கட்டுப்படும்.