ஆரஞ்சு: சிட்ரஸ் எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஆரஞ்சு இயற்கை நமக்களித்த சிறந்த பரிசுகளில் ஒன்று. உடல்நலத்தைப் பேணுவதிலும் இதன் பங்கு மகத்தானது. இதன் சுவையோ அனைவரையும் ஈர்க்கக் கூடியது. சீன நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட இக்கனி, உலகின் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.
ஆரஞ்சில் உள்ள சர்க்கரைப்பொருள் உடலில் உடனடியாகக் கலந்து, தெம்பளிக்கக்கூடியது. உடலில் உடனடியாக உஷ்ணத்தையும், சக்தியையும் தோற்றுவிக்க வல்லது. ஆரஞ்சு சொறி-கரப்பான் இவற்றைப்போக்க வல்லது. உடலுக்கு ஊட்டமளிக்கவல்லது. இதயத்தைப் பலப்படுத்தக்கூடிய இது, பற்கள் தொடர்பான வியாதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடியது. குறிப்பாக ஈறுகளைப் பாதிக்கும் ஸ்கர்வி என்ற நோய் (விட்டமின் சி குறைபாட்டினால் தோன்றுவது) ஆரஞ்சினைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் குணமாகிறது. பொதுவான சளித்தொல்லைகள், இன்ஃப்ளூயன்சா என்ற காய்ச்சல் இவற்றையும் கட்டுப்படுத்துகிறது.
காய்ச்சலின் பொழுது கொடுக்கக்கூடிய உணவுவகைகளில் முக்கிய இடம் பிடிப்பது ஆரஞ்சுச் சாறு. குறிப்பாக டைபாய்டு, அம்மை, காசநோய் இவற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக ஆரஞ்சுச் சாறு திகழ்கிறது. உடலின் ஆற்றலைத் தூண்டுதல், சிறுநீர் வெளியேற்றத்தை அதிகப்படுத்துதல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் விரைவில் நோய் குணமாகக் காரணியாதல் என ஆரஞ்சின் செயல்பாடு சிறப்பானதாக விளங்குகிறது. கபம், சளி இவற்றினை வெளிக்கொணரவும் ஆரஞ்சு உதவுகிறது.
வயிறு மந்தமாக இருத்தல், மலச்சிக்கல் இவற்றுக்கும் அருமருந்தாக இருப்பது ஆரஞ்சு. கால்சியம், விட்டமின் சி இவை அதிகம் காணப்படுவதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் ஆரஞ்சு வலுவூட்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் 'ஸ்கர்வி மற்றும் ரிக்கெட்ஸ்' போன்ற உடல்நலக்குறைபாடுகளுக்கு தினம் ஆரஞ்சுச் சாறு 15 முதல் 120 மி.லி வரை கொடுப்பது பயன் தரும்.
ஆரஞ்சு ஒரு சிறந்த அழகு சாதனப்பொருளாகவும் திகழ்கிறது. இதன் தோலினைக் கல்லில் தண்ணீருடன் சேர்த்து உரைத்துப் பூச, பருக்கள், வேனல் கட்டிகள் முதலியவை மறையும். ஆரஞ்சுத் தோலினைக் காயவைத்துப் பொடி செய்து, பாசிப்பயறுப்பொடி அல்லது கடலை மாவுடன் கலந்து பூசிவர சருமம் பொலிவினைப் பெறும். மின்னும் மிருதுவான சருமத்தை அடைய விரும்புபவர்கள், ஆரஞ்சுச் சாற்றினை சிறிது தண்ணீருடன் கலந்து முகத்தில் தினமும் பூசி, பத்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவேண்டும். சில தினங்களிலேயே முகம் பளபளப்பதை உணரலாம்.
சாத்துக்குடி: ஆரஞ்சின் இனமான சாத்துக்குடிப் பழமும் பல மருத்துவ நன்மைகளை உடையது. இது இரத்தத்தைச் சுத்தம் செய்யவும், சீரண உறுப்புகளைப் பலப்படுத்தவும், சீரணக்கோளாறுகளைச் சரி செய்யவும் வல்லது. ஆரஞ்சினைப் போலவே இதன் சாறும் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் பழைய நிலையை மீண்டும் அடையத் தேவையான சக்தித் தருவதோடு, நோய்த்தொற்று பரவாமலும் இது பாதுகாக்கிறது.
தர்பூசணி: முலாம்பழத்தின் வகையைச் சேர்ந்த தர்பூசணி ஆப்பிரிக்க நாட்டின் தென்பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது. மேற்புறம் பெரும்பாலும் பச்சையாகவோ, சில பழங்களில் மஞ்சளாகவோ இருக்கும். உள்புறம் சிவப்பான, இனிப்பான சதைப்பற்றான பகுதியை உடையது. பூசணி, பரங்கி போன்றவையும் இதன் இனத்தைச் சேர்ந்தவையே!
தர்பூசணியில் ஆறு சதவீதம் சர்க்கரையும், பெரும்பாலும் நீரும் அடங்கியுள்ளது. இதில் அடங்கியுள்ள விட்டமின்கள் என்னென்ன தெரியுமா? விட்டமின் A, B1,B3, B6, B9 மற்றும் C ஆகியவை. எனவே, மாலைக்கண் நோய், கண்பார்வைக்குறைபாடு இவைகளுக்கு சிறந்த மருந்தாக தர்பூசணி விளங்குகிறது. விட்டமின் பி, உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது, நரம்பு மண்டலங்கள் சரிவரச் செயல்பட உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக்கூட்டுகிறது. ஆக்சிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது.
உலகின் வெப்பப்பகுதிகளான ஆப்பிரிக்கா, ஆசியாக் கண்டங்களைச் சேர்ந்த மக்களைக் காப்பாற்றவென்றே இயற்கை அன்னை படைத்தளித்த பழம் இது. வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் வலிப்பு நோய், இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வாதநோய் இவை தர்பூசணியைத் தொடர்ந்து உட்கொள்ளும்பொழுது ஏற்படுவதில்லை.
தர்பூசணியில் உடலுக்கு இன்றியமையாத தாதுப்பொருட்களான பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. நிறைவுறாக் கொழுப்பு அடங்கியுள்ளதால் உடல் எடை அதிகரிப்பைக் கட்டுக்குள் வைக்கிறது. உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் அதிக அளவு தர்பூசணி சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சிற்றலின் அமிலம், இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாவண்ணம் காக்கிறது, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தி சரியாக்குகிறது.
இனிப்புச் சுவையுடன் இருந்தாலும், இதில் சர்க்கரைச் சத்து கொஞ்சம் குறைவுதான். மேலும் பொட்டாசியம் முதலிய தாதுப்பொருட்கள், இரத்தத்தில் இன்சுலின் அளவைச் சரியாக்கவும், இரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன. அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதன் காரணமாக, வயிறு நிரம்பிய உணவையும் அளிக்கின்றதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கும் ஏற்ற பழம் இது.
தர்பூசணி அதிக நீர்ச்சத்து உள்ள பழமாகையால், சிறுநீரகத்திற்கும் நன்மை புரிகிறது. இதன் சிவந்த சதைப்பகுதியில் உள்ள கரோடினாய்டுகள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கின்ற காரணியாகின்றன. குறிப்பாக லைகோபேன் என்ற காரணி புற்றுநோய் வராமல் காப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தர்பூசணி விதைகளில் அதிக அளவு புரோட்டீன் காணப்படுகிறது. இவற்றில் மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் தேவையான தாதுப்பொருட்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் உள்ளன.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==